சென்னையில் பிரபல ஒளிப்பதிவாளர் பிரியன் மாரடைப்பால் மரணம்  :இன்று மாலை உடல் அடக்கம்

தமிழ் பட உலகில் பிரபல ஒளிப்பதிவாளராக இருந்தவர் பிரியன். இவர் சென்னை கே.கே.நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனடியாக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு சிகிச்சை பலன் இன்றி மாரடைப்பால் பிரியன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54. மரணம் அடைந்த பிரியனுக்கு கல்யாணி என்ற மனைவியும், பிரியதர்ஷினி, ஸ்ரீமதி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

பிரியன் உடல் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட திரையுலகினர் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான விருதுநகருக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலை உடல் அடக்கம் நடக்கிறது.

பிரியன் உதவி ஒளிப்பதிவாளராக சினிமாவில் அறிமுகமானார். கமல்ஹாசன் நடித்த முன்றாம் பிறை படத்தில் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஓலங்கள், சத்மா படங்களிலும் உதவி ஒளிப்பதிவாளராக இருந்தார். மணிரத்னம் இயக்கிய நாயகன், பகல் நிலவு படங்களிலும் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

ஒளிப்பதிவாளர்கள் ராஜீவ் மேனன், சுரேஷ் மேனன் ஒளிப்பதிவு செய்த விளம்பர படங்களிலும் உதவியாளராக இருந்தார். கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் தேவயானி நடித்த தொட்டால் சிணுங்கி படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். கமல்ஹாசன் நடித்த தெனாலி, விஷால் நடித்த தாமிரபரணி, தோரணை, பூஜை, விஜய் நடித்த வேலாயுதம், விக்ரம் நடித்த சாமி, அருள், சூர்யா நடித்த சிங்கம், ஆறு, சிம்பு நடித்த வல்லவன் ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வெற்றிக்கொடி கட்டு, தமிழ், தேசிய கீதம், கோவில், ஐயா உள்பட 25-க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஹரி இயக்கத்தில் மட்டும் 14 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சாமி இரண்டாம் பாகம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வந்தார்.

ஒரு மாதமாக இதன் படப்பிடிப்பு நடந்து வந்த சூழ்நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துவிட்டார். பிரியன் ஒளிப்பதிவாளர் சங்கத்தில் துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். பிரியன் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளனர்.

[mashshare]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்